2014 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்தபோது, அஜித் பவார், துணை முதல்வராக இருந்தார்
Mumbai: தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரை, பாஜக, ஊழலில் ஈடுபட்டிருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில், அவரின் உதவியோடுதான் மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. நேற்று காலை யாரும் எதிர்பாராத விதமாக நடந்த பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார் அஜித். பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மீண்டும் முதல்வரானார்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ், 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா, ஆட்சியமைக்க இருந்த நிலையில், ‘ராஜதந்திரத்தால்' பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி மலர்ந்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது. அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் தங்கள் முதுகில் குத்திவிட்டதாக சொல்லும் சிவசேனா, “நேற்றிரவு 9 மணி வரை அஜித் பவார் எங்களுடன் அமர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்தி விவாதம் செய்து வந்தார். திடீரென்று அவரைக் காணவில்லை. சந்திப்புகளின் போதும் எங்கள் கண்களைப் பார்த்து அவர் பேசவில்லை. என்னமோ தவறாக நடக்கிறது என்று எங்களால் யூகிக்க முடிந்தது. அவரை போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்று ஆதங்கப்பட்டது.
Maharashtra: தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா, ஆட்சியமைக்க இருந்த நிலையில், ‘ராஜதந்திரத்தால்' பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி மலர்ந்துள்ளது.
அஜித் பவாரின் இந்த தடாலடி ‘பாஜக ஆதரவு' முடிவு, கட்சியையும் சரத் பவாரின் குடும்பத்தை உடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி, நேற்று ஆளுநரிடம் ஆட்சியமைக்க முறையிடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பாஜக - அஜித் பவார் முந்திக் கொண்டனர். அஜித், ஆளுநரிடம், என்.சி.பி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவக் கடிதத்தைக் கொடுத்ததில் ஒரு தில்லு முல்லு இருப்பதாக சரத் பவார் சொல்கிறார். அது தங்களது கூட்டணி ஆட்சிக்காக சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆதரவுக் கடிதம் என்றும், அதை முறைகேடாக அஜித், ஆளுநரிடம் சமர்பித்துவிட்டதாகவும் சரத் பவார் பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அஜித் பவார், சரத் பவாரின் அரசியல் வாரிசாக பார்க்கப்பட்டார். ஆனால், அவர் மீது இரண்டு ஊழல் வழக்குகள் நெருக்கடியைக் கொடுத்து வந்துள்ளன. அதிலிருந்து தப்பிக்கும் நோக்கிலேயே, அஜித், இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்துள்ளார் எனத் தெரிகிறது.
அஜித்துக்கு இன்னொரு பயமும் இருந்துள்ளது. சரத் பவாரின் மகளும் எம்.பி-யுமான சுப்ரியா சுலேவுக்கு, தேசியவாத காங்கிரஸில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், வருங்காலத்தில் சுலேவின் ஆதிக்கம் கட்சியில் ஓங்கும் என்று அஜித் நினைத்துள்ளாராம். இதன் காரணமாகக் கூட தனியாக பிரிந்து சென்று செயல்பட அவர் முடிவு எடுத்திருக்கலாம் என தகவல் தெரிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
2014 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்தபோது, அஜித் பவார், துணை முதல்வராக இருந்தார். அப்போது, 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நீர் பாசன ஊழலில் தொடர்பு இருப்பதாக அஜித் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது அவர் பதவி ராஜினாமா செய்யும் அளவுக்கு போனது.
தொடர்ந்து, அந்த ஆண்டில் ஆட்சியைப் பிடித்த தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக, அஜித்துக்கு எதிரான விசாரணையைத் தொடங்கியது.
இதன் அடுத்தக்கட்டமாக, கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக, அமலாக்கத் துறை, சரத் பவார் மற்றும் அஜித் பவார் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இப்படி அஜித்துக்குத் தொடர்ந்து அரசு தரப்பிலிருந்து அழுத்தங்கள் அதிகரித்து வந்தன. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் அவரின் ஆதிக்கம் குறைந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் அவரின் பாஜக ஆதரவு மூவ் நடைபெற்றுள்ளது.