This Article is From Nov 30, 2019

நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பட்னாவீஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!!

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் சிவசேனா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை பாஜக புறக்கணித்துள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா அரசு வெற்றி பெற்றிருக்கிறது.

பட்னாவீஸ் தலைமையில் வெளியேறும் எம்.எல்.ஏ.க்கள்.

Mumbai:

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நடைபெற்ற சிவசேனா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து, பாஜக எம்.எல்.ஏ.க்கள் தேவேந்திர பட்னாவீஸ் தலைமையில் வெளி நடப்பு செய்தனர். 

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக திகழ்ந்தாலும், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், ஆட்சி அமைக்க சிவசேனாவின் துணை தேவைப்பட்டது. எனினும், 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனா வலியுறுத்தி வந்தது.

எனினும், தனிப்பெரும் கட்சியான நாங்கள் எதற்கு முதல்வர் பதவியை விட்டுத்தர வேண்டும் என பாஜவும் விடப்படியாக மறுத்தது. இதனால், பாஜவால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் துணையுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் பதவியை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் உத்தவ் தலைமையிலான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதில், கவர்னர் நியமித்த இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்கருக்கு பதிலாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் திலீப் வால்சே பாட்டீல் சபாநாயகராக செயல்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பாஜக எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவீஸ் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து பட்னாவீஸ் அளித்த பேட்டியில், 'கவர்னரால் நியமிக்கப்பட்ட சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை. இதுபோன்ற சம்பவம் வரலாற்றிலேயே நடந்தது கிடையாது?. எதற்காக சிவசேனா அரசு இப்படி செய்தது?. ஏன் இப்போது பயப்படுகிறார்கள்?' என்று கேள்வி எழுப்பினார். 

.