This Article is From Nov 25, 2019

நள்ளிரவில் அஜித் பவார் - தேவேந்திர ஃபட்னாவிஸ் திடீர் ஆலோசனை!

Maharashtra: அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை என சரத்பவார் தெரிவித்துள்ளார்.

Maharashtra: பாஜகவுக்கு அஜித் பவார் ஆதரவு தெரிவித்ததற்கு சரத்பவார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

New Delhi:

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் அறிவித்ததை தொடர்ந்து, நள்ளிரவில் தேவேந்திர பட்னாவிஸூம், அஜித் பவாரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். 

இந்த ஆட்சியமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் ஃபட்னாவிஸ் - அஜித் பவார், மகாராஷ்டிர ஆளுநரிடம் சமர்பித்த ஆதரவுக் கடிதங்களை இன்று காலை, தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படிபட்ட பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்திற்கும் காரணமான அஜித் பவார், குழப்பும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். 

அதில், “நான் தேசியவாத காங்கிரஸில்தான் இருக்கிறேன். எப்போதும் தேசியவாத காங்கிரஸில்தான் இருப்பேன். சரத் பவார்தான் எனது தலைவர். பாஜக - என்சிபி கூட்டணி, மகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான அரசை வழங்கும். மகாராஷ்டிர மக்களின் நலனுக்காக இந்தக் கூட்டணி வேலை செய்யும்,” என்று தனது ட்விட்டர் பதிவில் அஜித் பவார் கூறியிருந்தார். 
 


இதையடுத்த சில நிமிடங்களில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், அஜித்பவாரின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார். அதில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது என்றார். 

மேலும், அஜித்பவாரின் கருத்து தவறானது என்றும், மக்களிடையே குழப்பத்தையும், தவறான உணர்வையும் உருவாக்கும் வகையில், அஜித் பவாரின் கருத்து உள்ளது என்று அவர் கூறியிருந்தார். 
 


முன்னதாக, மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ், 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா, ஆட்சியமைக்க இருந்த நிலையில், ‘ராஜதந்திரத்தால்' பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி மலர்ந்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது. அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்றுள்ளார். 

தற்போது அமைந்துள்ள மகாராஷ்டிர அரசுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான என்.வி.ரமணா, அஷோக் பூஷண் மற்றும் சஞ்சிவ் கண்ணா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம், இன்று காலை 10:30 மணிக்குள், எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, தன் பதவிக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில், பாஜக தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்று சிவசேனா - காங் - என்சிபி தரப்பு, நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தியது. 

அதற்கு பாஜக தரப்பு, ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஆதரவுக் கடிதங்களை சமர்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரியது. அதை மறுத்துவிட்டது நீதிமன்றம். 

“மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அனைத்து விஷயங்கள் குறித்தும் தெளிவு கிடைத்துவிடும். பாஜக தரப்பு அதில் தோல்வி பெறும். நாங்கள் வெற்றி பெறுவோம்,” என்று காங்கிரஸ் தரப்பு உறுதியாக சொல்கிறது. 
 

.