Read in English
This Article is From Nov 23, 2019

“3 நாளுக்கு மேல...”- Maharashtraவில் காங்கிரஸ் செய்த தவறு… முக்கியப் புள்ளியின் கலகக் குரல்!

#MaharashtraGovtFormation - “மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது என்பதைப் படித்ததை என்னால் நம்பவே முடியவில்லை"

Advertisement
இந்தியா Posted by

#MaharashtraGovtFormation - மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது.

Mumbai:

Maharashtra Govt Formation - மகாராஷ்டிராவில் (Maharashtra) எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸும் பாஜக-வும் (NCP - BJP) கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், சரத் பவார், சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், நடந்தது வேறு. சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிராவில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெகு நாட்கள் நீடித்ததே தற்போதைய நிலைக்குக் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது என்பதைப் படித்ததை என்னால் நம்பவே முடியவில்லை. முதலில் நான் அதை போலிச் செய்தி என்று நினைத்தேன். தனிப்பட்ட முறையில் பேசுவது என்றால், மூன்று கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தை 3 நாட்களுக்கு மேல் நீடித்திருக்கக் கூடாது… ஆனால், வெகு நாட்கள் எடுத்துக் கொண்டன கட்சிகள். நாம் கொடுத்த இடத்தை சட்டென்று சிலர் பயன்படுத்திக் கொண்டனர். பவார்ஜி, நீங்கள் கிரேட். இன்னும் இதை உண்மை என்று நம்ப முடியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். 

யாரும் எதிர்பாராத வகையில், நேற்று நள்ளிரவில், தேசியவாத காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது. அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

அஜித் பவார் தங்கள் முதுகில் குத்திவிட்டதாக சொல்லும் சிவசேனா, “நேற்றிரவு 9 மணி வரை அஜித் பவார் எங்களுடன் அமர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்தி விவாதம் செய்து வந்தார். திடீரென்று அவரைக் காணவில்லை. சந்திப்புகளின் போதும் எங்கள் கண்களைப் பார்த்து அவர் பேசவில்லை. என்னமோ தவறாக நடக்கிறது என்று எங்களால் யூகிக்க முடிந்தது. அவரை போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்று ஆதங்கப்பட்டது. 

Advertisement

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ், 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

Advertisement