". சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது"
Mumbai: Maharashtra Politics - மகாராஷ்டிராவில் அதிரடி அரசியல் திருப்பங்கள் நடைபெற்ற நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர், சதர் பவாரும், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும், ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் பவார்.
“அஜித் பவாரைத் தவிர, தேசியவாத காங்கிரஸ் தரப்பிலிருந்து 10 அல்லது 11 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கலாம். உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டன் எப்போதும் பாஜக-வுடன் கூட்டணி சேர மாட்டான். பாஜக, எப்போதும் எந்த வழியில் வேண்டுமானாலும் ஆட்சியமைக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளும். தேசியவாத காங்கிரஸில் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படாது. சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. அனைத்து கட்சித் தொண்டர்களும் இந்தக் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள்,” என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படபடத்தார் சரத் பவார்.
யாரும் எதிர்பாராத வகையில், நேற்று நள்ளிரவில், தேசியவாத காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பைத் தொடர்ந்து முதல்வர் ஃபட்னாவிஸ், “மகாராஷ்டிராவுக்குத் தேவை நிலையான அரசுதான். உப்புமா அரசு கிடையாது. சிவசேனா, மக்களின் தீர்ப்பை மதிக்கவில்லை. பாஜக-வுக்கு ஆதரவளித்துள்ள தேசியவாத காங்கிரஸுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்,” என்றார் உறுதியாக.
அஜித் பவார் பேசுகையில், “மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து, எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வந்தது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. விவசாயப் பிரச்னை உட்பட. ஆகவேதான் நிலையான அரசை உருவாக்க நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்,” என்று தனது நிலைப்பாடு குறித்து விளக்கினார்.