Maharashtra Politics: நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்படவில்லை என்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும்.
Mumbai: மகாராஷ்டிர (Maharashtra) மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த மூவ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாஜக (BJP) பிரதிநிதிகள் மாநில ஆளுநரைச் சந்தித்து ஒரு பக்கம் பற்றவைத்தால், மறுபக்கம் சிவசேனா (Shiv Sena), தனது சட்டமன்ற உறுப்பினர்களை ஓட்டலுக்குள் குடியேற்றி தெறிக்கவிடுகின்றனர்.
பாஜக-வுக்கு சுமார் 182 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது என்ற செய்தி கசிந்ததைத் தொடர்ந்து பதற்றமடைந்த சிவசேனா, தங்கள் கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா', தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு பொட்டிப் பொட்டியாக பணம் தர பேரம் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில்தான் சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே, தனது இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். அதைத் தொடர்ந்துதான் அவர்கள் ஓட்டலுக்குள் தங்கவைக்கப்பட்டனர் எனப்படுகிறது.
தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து, மகாராஷ்டிர பாஜக தலைவர், சந்திரகாந்த் பாட்டில், “பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றது. அதனடிப்படையில் ஆட்சியமைய வேண்டும். இது குறித்து ஆளுநரிடம் பேசினோம். தற்போது உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து அவருடன் விவதாதித்தோம்,” என்று ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.
சிவசேனா தரப்பில், ஆட்சியில் சரிபாதி அதிகாரப் பகிர்வு கேட்கப்பட்டு வருகிறது. இந்த '50:50 ஃபார்முலா'-வுக்கு பாஜக இசைவு தெரிவிக்க மறுத்து வருகிறது. இன்றைய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் உத்தவ் தாக்கரே, “பாஜக சொல்வதை ஏற்றுக் கொள்ள நாம் ஏன் 15 நாட்களை வீண்டித்தோம்,” என்று கேள்வி எழுப்பினாராம்.
“பாஜக, இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க அதிகாரம் கோரவில்லை. தங்களுக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக சொல்லும் பாஜக, ஏன் எம்.எல்.ஏ-க்கள் பட்டியலை ஆளுநரிடம் சமர்பிக்கவில்லை,” என்று கேட்டுள்ளார் சிவசேனாவின் சஞ்சய் ராவத்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தற்போது பாஜக - சிவசேனா இடையில் நிலவி வரும் பிரச்னையைத் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், “தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் முதல்வராக பதவியேற்க வேண்டும். பாஜக-தான் 105 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதனடிப்படையில் பாஜக-வைச் சேர்ந்தவர்தான் முதல்வராக இருக்க வேண்டும்,” என்றுள்ளார். அதே நேரத்தில் ஃபட்னாவிஸ், முதல்வராக இருக்கக் கூடாது என்று சிவசேனா சொல்லி வருகிறதாம். அதை கணக்கில் எடுத்துக் கொண்டு நிதின் கட்கரி, முதல்வர் பதவியில் அமரவைக்கப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்படவில்லை என்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இருவரும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேர்தலுக்கு முன்பே பாஜக - சிவசேனா இடையே நிறைய உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே, அதிகாரப் பகிர்வில் 50:50 ஃபார்முலா அமலாக்கப்பட வேண்டும் என்று சொன்னதால், இருவருக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்தது.
“தற்போதைய நிலைமையில் எங்களிடம் ஆட்சியமைப்பதற்கான பலம் இல்லை. பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளிடம்தான் அது உள்ளது. நாங்கள் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையைத்தான் பார்த்து வருகிறோம்.” என்று சூசகமாக பதில் அளித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.