This Article is From Nov 24, 2019

Maharashtra-வில் தப்புமா ஆட்சி..? - உச்ச நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட் - அடுத்தடுத்த பரபரப்பு!

Maharashtra Politics - தற்போது சேனா - காங் - என்சிபி சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் இருக்கும் தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Maharashtra Politics - மகாராஷ்டிராவில் நேற்று காலை 5.47 மணி அளவில், மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது.

New Delhi:

Maharashtra Politics - மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த ஆட்சியமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் ஃபட்னாவிஸ் - அஜித் பவார், மகாராஷ்டிர ஆளுநரிடம் சமர்பித்த ஆதரவுக் கடிதங்களை நாளை காலை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளைக்குள் ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று சிவசேனா - காங் - என்சிபி வைத்த கோரிக்கையை தற்போது நீதிமன்றம் ஏற்கவில்லை. நாளைய விசாரணையில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும். 

10 Points:

1.உச்ச நீதிமன்ற நீதிபதிகளான என்.வி.ரமணா, அஷோக் பூஷண் மற்றும் சஞ்சிவ் கண்ணா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, நாளை காலை 10:30 மணிக்குள் ஆதரவுக் கடிதங்களை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2.மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, தன் பதவிக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில், பாஜக தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்று சிவசேனா - காங் - என்சிபி தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 

3.இதற்கு பாஜக தரப்பு, ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஆதரவுக் கடிதங்களை சமர்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரியது. அதை மறுத்துவிட்டது நீதிமன்றம். 

4.”மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அனைத்து விஷயங்கள் குறித்தும் தெளிவு கிடைத்துவிடும். பாஜக தரப்பு அதில் தோல்வி பெறும். நாங்கள் வெற்றி பெறுவோம்,” என்று காங்கிரஸ் தரப்பு உறுதியாக சொல்கிறது. 

5.தற்போது யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதில்தான் ஆட்சி அதிகாரம் யார் பக்கம் இருக்கும் என்பது தெரியவரும். இரு தரப்பும் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக சொல்லி வருகின்றன. 

6.மகாராஷ்டிராவில் நேற்று காலை 5.47 மணி அளவில், மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து, காலை 8 மணி அளவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்துதான் சேனா - காங் - என்சிபி தரப்பு, நீதிமன்றத்தை அணுகியது. 

7.தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது. அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்றுள்ளார்.

8.தற்போது சேனா - காங் - என்சிபி சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் இருக்கும் தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் சிலர் கோவாவில் முகாமிட்டுள்ளார்களாம்.

9.இதில் மேலும் ஒரு திருப்பமாக பாஜக எம்.பி., சஞ்சய் காக்கடே, சரத் பவாரை இன்று அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தச் சந்திப்பு என்று காக்கடே விளக்கம் கொடுத்துள்ளார். 

10.கொள்கை ரீதியாக நேரெதிர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த காங்கிரஸ், என்சிபி - சிவசேனாவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பல முரண்களையும் பேசித் தீர்த்தி விட்டதாம். சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தின் முதல்வராக பதவியேற்பார் என்றும் உறுதி செய்யப்பட்டது. ஆட்சி அதிகாரம் கோர ஆளுநரை 3 கட்சியினரும் சந்திக்க இருந்தனர். அதைத் தொடர்ந்துதான் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறிவிட்டன. 

.