Maharashtra Politics - சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார்
New Delhi: Maharashtra Politics - பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) இன்று மகாராஷ்டிராவின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) திரும்பப் பெறப்பட்டுள்ளது. சரியாக, இன்று அதிகாலை 5:47 மணிக்கு, குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த மாதம் மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த மாதம் 12 ஆம் தேதியிலிருந்து அம்மாநிலம் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்குக் கீழ் இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று உள்துறை அமைச்சகத்தின் செயலாளர், அஜய் குமார் பல்லா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுவதாக அறிக்கை வெளியிட்டார்.
தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நேற்றிரவு முதன்முறையாக ஒரே இடத்தில் சந்தித்து, ஆட்சியமைப்பது குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து சரத் பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தார். இன்று மதியம் உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.
இப்படிப்பட்ட நேரத்தில்தான் யாரும் எதிர்பாராத வகையில், நேற்று நள்ளிரவில், தேசியவாத காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பைத் தொடர்ந்து முதல்வர் ஃபட்னாவிஸ், “மகாராஷ்டிராவுக்குத் தேவை நிலையான அரசுதான். உப்புமா அரசு கிடையாது. சிவசேனா, மக்களின் தீர்ப்பை மதிக்கவில்லை. பாஜக-வுக்கு ஆதரவளித்துள்ள தேசியவாத காங்கிரஸுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்,” என்றார் உறுதியாக.
சரியாக, இன்று அதிகாலை 5:47 மணிக்கு, குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது
அஜித் பவார் பேசுகையில், “மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து, எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வந்தது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. விவசாயப் பிரச்னை உட்பட. ஆகவேதான் நிலையான அரசை உருவாக்க நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்,” என்று தனது நிலைப்பாடு குறித்து விளக்கினார்.
தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது. அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் தங்கள் முதுகில் குத்திவிட்டதாக சொல்லும் சிவசேனா, “நேற்றிரவு 9 மணி வரை அஜித் பவார் எங்களுடன் அமர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்தி விவாதம் செய்து வந்தார். திடீரென்று அவரைக் காணவில்லை. சந்திப்புகளின் போதும் எங்கள் கண்களைப் பார்த்து அவர் பேசவில்லை. என்னமோ தவறாக நடக்கிறது என்று எங்களால் யூகிக்க முடிந்தது. அவரை போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்று ஆதங்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ், 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.