உச்ச நீதிமன்றத்தில் நாளை முக்கிய தீர்ப்பு வெளியாகவுள்ளது.
Mumbai: மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 162 பேர், ஒரே இடத்தில் கூடி கட்சிக்கு எதிரான நடவடிக்கையிலும், பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து ட்விட் செய்திருந்த சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், இன்று 7 மணிக்கு சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேர் கிராண்ட் ஓட்டலில் கூடுவதாகவும், இந்த பெரும்பான்மையை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் எம்எல்ஏக்கள் 162 பேர் கிராண்ட் ஓட்டலில் கூடினார். அப்போது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘இங்கு கூடியிருக்கும் நமது ஆதரவு எம்எல்ஏக்களை படம் பிடிக்க பெரிய கேமரா தேவைப்படுகிறது. வாய்மையே வெல்லும் என்பதன் மீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாம் யாருக்கும் பயப்படப் போவதில்லை. யாரும் நம்டை உடைக்க முடியாது' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசுகையில்,'நான் அஜித் பவாரை ஆதரிப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அஜித் பவார் தன்னிச்சையாகத்தான் செயல்பட்டார். எம்எல்ஏக்கள் எல்லாம் தன்னுடன் வந்து விடுவார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை.
இதுஒன்றும் கோவா அல்ல பாஜக ஆட்சி அமைப்பதற்கு; இது மகாராஷ்டிரா. நெருப்புடன் விளையாடுபவர்களுக்கு பாடம் கற்பிக்க நமக்குத் தெரியும். குறிப்பாக சிவசேனா இப்போது நம்முடன் இருக்கிறது.' என்றார்.
இந்த கூட்டத்தை பொருட்படுத்தாத பாஜக தலைவர் ஆசிஷ் சீலார், ‘இது ஒன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு அல்ல. தன்னம்பிக்கை ஏற்படுவதற்காக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார்கள்' என்றார்.
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை முக்கிய தீர்ப்பு வெளியாக உள்ளது