பாஜக - சிவசேனாவுக்கு இடையிலான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, பிஜேபி தரப்பு, தேசியவாத காங்கிரஸுக்குத் தூது விட்டு வருவதாகவும் ஒரு தகவல் உலவி வருகிறது.
ஹைலைட்ஸ்
- சோனியா காந்தியை, காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர்
- 3 கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்யும் முடிவில் இருக்கின்றன
- Congress, NCP, Sena பொது அஜெண்டாவை முடிவு செய்து விட்டார்களாம்
New Delhi: மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் (Congress), தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியமைக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் தலைவர் சோனியா காந்தியை (Sonia gandhi) சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், “மகாராஷ்டிரா குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று அழுத்தமாக கூறியுள்ளார்.
சோனியா காந்திக்கு, முதலில் இருந்தே கொள்கை ரீதியாக வேறுபாடுடைய சிவசேனாவுடன் சேர்வதில் தயக்கங்கள் இருந்துள்ளன. ஆனால், அவருக்கு நெருக்கமான காங்கிரஸ் முக்கிய புள்ளிகள், “பாஜகதான் நம் முதல் எதிரி. அதை வீழ்த்த இந்தக் கூட்டணியில் தவறில்லை,” என்று அறிவுரை கொடுத்துள்ளார்களாம். அதைத் தொடர்ந்துதான் கூட்டணியை இறுதி செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார் சோனியா.
தேசியவாத காங்கிரஸ் தரப்பும், “சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுதான் மகாராஷ்டிராவில் ஆட்சியைக்க உள்ளது. இன்னும் சில விஷயங்களில் தெளிவில்லாததே ஆட்சியமைக்க ஏற்பட்டுள்ள தாமதத்திற்குக் காரணம்,” என்று சூசகமாக சொல்லியிருக்கிறது.
3 கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றி நன்கு அறிந்த வட்டாரம், பொது அஜெண்டாவாக எது இருக்க வேண்டும் என்பது பற்றி அனைவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதிகாரப் பகிர்வில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கிறது.
பாஜக - சிவசேனாவுக்கு இடையிலான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, பிஜேபி தரப்பு, தேசியவாத காங்கிரஸுக்குத் தூது விட்டு வருவதாகவும் ஒரு தகவல் உலவி வருகிறது. பாஜக, சிவசேனாவுடன் கூட்டணி வைத்தாலும் சரி, தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தாலும் சரி, ஆட்சியமைக்கும் அளவுக்கு பலம் பெற்றுவிடும்.
இப்படிப்பட்ட சூழலில்தான், தேசியவாத காங்கிரஸுக்கு, பிரதமர் நரேந்திர மோடியே நாடாளுமன்றத்தில் பாராட்டு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சரத் பவார் - மோடி இடையிலான சந்திப்பு சந்தேகங்களை மேலும் அதிகமாக்கின.
இப்படி இன்னொரு பக்கம் மகாராஷ்டிர அரசியல் குழப்பம் திரும்பிக் கொண்டிருந்த வேளையில்தான் காங்கிரஸ், சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பதில் முனைப்புக் காட்டத் தொடங்கியதாம். இப்படி மகாராஷ்டிர அரசியல் களத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் அனைத்து சம்பவங்களும், கசிந்து வரும் தகவல்களும் பரபரப்பைக் கூட்டி வருகின்றன.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, முதல்வர் பதவியில் பங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாஜக-வுக்கு வைத்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.