சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை முதல்வராக பதவியேற்கிறார்
Mumbai: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கு உள்ளதை தொடர்ந்து, சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தங்கள் அதிகாரப்பகிர்வை இறுதி செய்கிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் படேல் கூறும்போது, தேசியவாத காங்கிரஸூக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது என்றும் சபாநாயகர் பதவி காங்கிரஸூக்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், எத்தனை அமைச்சர்கள் பதவியேறக்கிறர்கள் என்பது ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். ஒவ்வொரு கட்சியை சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, இன்று காலை யார் யார் பதவியேற்க உள்ளனர் என்பது குறித்த முழு விவரங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் பிரபுல் படேல் தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கு உள்ள நிலையில், மும்பை முழுவதும் தாக்கரே சர்க்கார் போஸ்டர்கள்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி 80 மணி நேரத்தில் கவிழ்ந்ததை தொடர்ந்து, சிறு சிறு கட்சிகள் மற்றும், சுயேட்சைகள் கூட்டணியுடன் இன்று புதிய ஆட்சி அமைய உள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப், அடுத்த இரண்டு நாட்களில் மூன்று கட்சிகளுக்கான அதிகாரப்பகிர்வு இறுதி செய்யப்படும் என்றார். அமைச்சரவையில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் அமைச்சர் பதவி யாருக்கு என்ற விவரங்களும் அடுத்த இரண்டு நாட்களில் முடிவாகும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், திடீரென ஆட்சி அமைப்பது, ஜனநாயக விரோதமானது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்திருந்தன.
இந்த வழக்கு விசாரணையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது.
பின்னர், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க காலதாமதம் ஆனால், குதிரை பேரத்திற்கு வாய்ப்பு உள்ளதால் ஜனநாயகத்தை காக்கும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இதுபோன்ற நேரத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.