உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
- இன்று டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு
- உத்தரவு செயல்படுத்தப்பட்டது குறித்து அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும்
காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, காந்தி நினைவு நாளான இன்று மதுவிலக்கு நாளாக அறிவித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோன்று டாஸ்மாக்குகளுடன் இணைந்த பார்கள், ஓட்டல்களிலும் மது விற்பனைக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு செயல்பட்ட விதம் குறித்து அதிகாரிகள் நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த உத்தரவு குறித்த விவரங்கள் தமிழக உள்துறை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)