150ஆம் பிறந்தநாள் விழாவில் இவ்விருது அவருக்கு அறிவிக்கப்படுவது சிறந்த வரலாற்றுச்சிறப்புமிக்க மரியாதையாக இருக்கும்: பிரசூன் சர்மா
New Delhi: மகாத்மா காந்திக்கு அமெரிக்கப் பேரவையின் தங்கப் பதக்கம் (Congressional Gold Medal) வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூ யார்க்கில் நடந்த இந்தியா டே ஊர்வலத்தில் பேரவை உறுப்பினர் கேரோலின் பி மேலனி இதற்கான சட்டத்தை அறிமுகம் செய்தார்.
“காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அகிம்சை முறையிலான சத்தியாகிரக இயக்கம் இந்திய நாட்டையும் ஒட்டுமொத்த உலகத்தையும் எழுச்சிபெறச் செய்தது. அவர் ஏற்படுத்திய தாக்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதனால்தான் மறைந்த தலைவர் காந்திக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான பேரவையின் தங்கப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்னும் இச்சட்டத்தை முன்மொழிகிறேன்” என்று மேலனி கூறியுள்ளார்.
இப்பேரணியில், காந்தி படித்த இலண்டன் UCL-ஆல் உலகளாவிய பொதுத் தலைமைத் திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியா குளோபல் நிறுவன இயக்குநர் பிரசூன் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரை சர்வதேச அகிம்சை நிறுவனத் தலைவர் டாக்டர் நீதா ஜெய்ன் வரவேற்றார். நீதா ஜெய்னும் அமெரிக்க இந்தியப் பேரவையும் இணைந்து மகாத்மா காந்திக்கு இவ்விருதைப் பெற்றுத் தரும் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசூன் சர்மா பேசுகையில், “2018இல் வரவுள்ள காந்தியின் 150ஆம் பிறந்தநாள் விழாவில் இவ்விருது அவருக்கு அறிவிக்கப்படுவது சிறந்த வரலாற்றுச்சிறப்புமிக்க மரியாதையாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் காந்தியின் அகிம்சை, அமைதி கொள்கைகள் இவ்வுலகுக்கு மிகவும் தேவை” என்றார்.