மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி.
New Delhi: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கடந்த 2014-ல் காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்று காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு மோடி செல்கிறார். அங்கு திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் அறிவிப்பை மோடி வெளியிடுவார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,'நாம் பேரன்பு வைத்திருக்கக் கூடிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திக்கொள்கிறேன். மனித குலத்திற்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு மகத்தானது. அவரது கனவை நனவாக்க, இன்னும் சிறப்பு மிக்க உலகத்தை உருவாக்க நாம் அயராது உழைப்போம்' என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்றுதான் வருகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் அமந்திருக்கும் விஜய்காட்டிற்கு சென்று அங்கு மோடி மரியாதை செலுத்தினார்.
குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி, அங்கு திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
காங்கிரஸ் தரப்பில் இன்றைக்கு பேரணிகள் நடத்தப்படுகின்றன. டெல்லி பேரணிக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தியும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் பேரணிக்கு பிரியங்கா காந்தியும் தலைமை வகிக்கின்றனர்.