This Article is From Jun 05, 2019

’பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்குங்கள்’: மோடிக்கு எடப்பாடி கோரிக்கை!

பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

’பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்குங்கள்’: மோடிக்கு எடப்பாடி கோரிக்கை!

முன்னதாக, புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது. அதில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வரைவு பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டு, மக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துனர். அத்துடன் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது.

இதைத்தொடர்ந்து, இரண்டே நாட்களில் திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. மேலும், விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என திருத்தப்பட்ட வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் 3-வது மொழியாக இந்தியை கட்டாயமாக பயில வேண்டும் என்பது அவசியமில்லை.

மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த புதிய கல்விக்கொள்கை வரைவில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடியை 'டேக்' செய்து கூறியுள்ளதாவது, பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். விருப்ப மொழியாக தமிழை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்பது, உலகின் சிறந்த மொழிக்கு செய்யும் சிறந்த சேவையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.