Read in English
This Article is From Oct 01, 2019

’இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள்’ - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Edited by

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது, “உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது, அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா. அவையில் உரையாற்றும்போது, செம்மொழித் தமிழின் உன்னத வரிகளான, கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் இந்தச் சொற்கள் இங்குள்ள நம் எல்லோருக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியவை. தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

Advertisement

மிகவும் மூத்த, தொன்மையான மொழி தமிழ்தான் என்பதைப் பன்னெடுங்காலமாக மொழியியல் வல்லுநர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மேலை நாட்டறிஞர்கள் பலரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வந்த நிலையில், அந்தத் தமிழ் கூறும் மண்ணின் மீது, மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லாமல் வழக்கொழிந்த சமஸ்கிருதத்தையும், ஆதிக்க மனப்பான்மையுடன் இந்தியையும் திணிப்பதில், கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாகச் செயல்பட்டது நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பா.ஜ.க. அரசு.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி - சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்பட்டதுடன், அவை குறித்து தமிழில் விளம்பரம் வெளியிடும்போதுகூட, இந்தி - சமஸ்கிருத உச்சரிப்பிலேயே, தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

Advertisement

என்ன திட்டம், அதன் பொருள் என்ன என்பதைக்கூட தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு; மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று மாற்றுவது, சமஸ்கிருத வாரத்தைகளை எல்லா இடங்களிலும் கட்டாயப்படுத்த முனைவது, ரயில்வே - அஞ்சலகம் - வங்கி உள்ளிட்ட துறைகளில் இந்தியை மட்டும் முன்னிலைப்படுத்தி, மற்ற மொழி பேசுவோரின் வேலைவாய்ப்பைப் பறிப்பது, இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற குரலை அடிக்கடி ஒலிக்கச் செய்வது - இப்படி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வந்த நிலையில்; அதில் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி தரத் தக்க பெரிய மாற்றமாக, "தமிழ்தான் உலகின் பழமையான மொழி" என்ற வரலாற்று உண்மையை இந்தியப் பிரதமர் அவர்கள் ஏற்றுப் போற்றியிருப்பது அமைந்திருக்கிறது.

Advertisement

"தமிழ்தான் உலகின் பழமையான மொழி" என்ற வரலாற்று உண்மையை பிரதமர் அவர்கள் ஏற்றுப் போற்றியிருப்பதை திமுக சார்பில் உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

இந்நேரத்தில், 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்க வேண்டும் என பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது.

Advertisement

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைத்திடும் கோரிக்கையின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என்றும் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement