நடிகரும் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியின் தலைருமான கமல்ஹாசன், கடந்த சில வாரங்களாக கஜா புயல் பாதித்த இடங்களில் தொடர்ந்து சுற்றுப் பயணம் செய்து வருகிறார்
Chennai: நடிகரும் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியின் தலைருமான கமல்ஹாசன், கடந்த சில வாரங்களாக கஜா புயல் பாதித்த இடங்களில் தொடர்ந்து சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், ‘இடைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம், தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி வைக்குமா' என்பது குறித்து பதிலளித்துள்ளார்.
இது குறித்து கமல் நம்மிடம் பேசுகையில், “சிலர் எங்கள் கூட்டணி கணக்கு குறித்து கற்பனை செய்து வருகிறார்கள். நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க மாட்டோம். அது பொதுத் தளத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. தமிழக மக்களுக்கு எது நல்லதோ, அதற்கு ஏற்றாற் போல் எங்களின் செயல்பாடுகள் இருக்கும்” என்றார்.
அவர் தொடர்ந்து ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மூடப்பட்டிருக்க ஸ்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரசு, மக்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்” என்று கூறினார்.
தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை சமீபத்தில் அரசாணை வெளியிட்டு மூடியது. இந்த முடிவுக்கு எதிராக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். இந்த வழக்கில், ‘ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது தவறு. ஆலையைத் திறக்க உத்தரவிடுகிறோம்' என்று தீர்ப்பளித்தது. இதையொட்டித்தான் கமல், அரசு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.