This Article is From May 17, 2019

''மாற்றான் கொடுத்த பட்டயத்தை “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை!'' : கமலால் மீண்டும் சர்ச்சை

கமலின் சர்ச்சை பேச்சு பிரதமர் மோடி வரை சென்று விவாதப்பொருளாக மாறியுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று ஓய்ந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதற்கு பல விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

''மாற்றான் கொடுத்த பட்டயத்தை “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை!'' : கமலால் மீண்டும் சர்ச்சை

கமல் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று நிறைவு பெற்றுள்ள நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சமூக வலைதளங்களில் ஒரு பதிவினையிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை சுட்டிக்காட்டி அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசார களத்தில் கமல் பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

கமல் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், மதுரை மற்றும் தூத்துக்குடியில் அவருக்கு செருப்பு வீச்சு சம்பவங்களும் நடந்தன.

கமலின் சர்ச்சை பேச்சு பிரதமர் மோடி வரை சென்று விவாதப்பொருளாக மாறியுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று ஓய்ந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதற்கு பல விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கமலின் பதிவு -

சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.

மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.

12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம்.

ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை...

நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.

நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

புரியலன்ற சோமாரிகளுக்கு....

“ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.

“கோடி”ன்ன உடனே “பணம்” ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! “தமிழா” நீ தலைவனாக வேண்டும். 
இதுவே என் வேண்டுகோள்

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

.