இந்த வாரத் தொடக்கத்தில் இந்திய அரசு, காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து உத்தரவிட்டது.
New Delhi: காஷ்மீரில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி கவலையாக இருக்கிறது என்று நோபல் பரிசை வென்ற மலாலா யூசஃப்சாய், மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வாரத் தொடக்கத்தில் இந்திய அரசு, காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து உத்தரவிட்டது.
“நான் குழந்தையாக இருந்தது முதல் காஷ்மீர் மக்கள் போர் சூழலில்தான் வாழ்ந்து வருகின்றனர். எனது அப்பா, அம்மா குழந்தையாக இருந்தபோதும் அதுதான் நிலை. எனது தாத்தா, பாட்டி இளமையாக இருந்த போதிலிருந்து இதுதான் நிலைமை.
இன்று நான் அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்தான பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். போர் சூழலின் போது அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள்தான். அதிகம் இழப்பதும் அவர்கள்தான்” என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் மலாலா.
நேற்று பாகிஸ்தான் அரசு, தனது நாட்டிலிருந்த இந்தியத் தூதரை வெளியேற்றியது. அதேபோல இந்தியாவுக்கு எதிராக 5 கட்ட நடவடிக்கையும் எடுக்க உள்ளதாக பாகிஸ்தான் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் மலாலாவின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மலாலா சென்ற பேருந்துக்குள் ஏறிய தீவிரவாதி, “யார் மலாலா..?” என்று கேட்டு, அவரை சுட்டார். அவருக்கு இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். பெண்களுக்கான கல்வி மற்றும் மனித உரிமைகளுக்காக மலாலா குரல் கொடுத்ததே, அவரை சுடக் காரணம் என்று சொல்லப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோதும், மலாலா, பெண்கள் கல்வி குறித்து குரல் கொடுத்தார். இதனால் அவருக்கு 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40,000 பேர் அங்கு பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 370 ரத்தைத் தொடர்ந்து சில இடங்களில் கல் எறியும் சம்பவங்கள் நடந்தபோதும், பெரிதாக எந்தவித அசம்பாவிதங்களும் அங்கு நடைபெறவில்லை என்று மத்திய அரசு தரப்பு கூறுகிறது.