மாலத்தீவில் அதிபர் இப்ராஹிம் சாலிஹ் பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்கிறார்.
New Delhi: மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இப்ராஹிம் சாலிஹ், வரும் 17- ம் தேதி பதவி ஏற்றுக் கொள்கிறார். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று மோடி மாலத்தீவு செல்லவுள்ளார்.
ஒருநாள் மாலத்தீவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுடன் நட்புறவு மேற்கொள்ளும் வகையில், இந்திய பிரதமர் மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறார்.
மாலத்தீவில் கடந்த செப்டம்பர் 23-ம்தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் முகமது சாலிஹ், அதிபர் யமீனை வென்று அதிபர் பதவியை கைப்பற்றினார். இந்தநிலை பதவி ஏற்பு விழா வரும் 17-ம்தேதி நடைபெறுகிறது.
நாட்டின் கடல்சார் பாதுகாப்பை பொறுத்தவரையில் இந்தியாவின் மிக முக்கிய கூட்டாளியாக மாலத்தீவு இருந்து வருகிறது. இங்கு ஆதிக்கம் செலுத்த கடந்த சில ஆண்டுகளாக சீனா முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.