ரூ. 9 ஆயிரம் கோடி மோசடி வழக்குகள் விஜய் மல்லையாவின் மீது தொடரப்பட்டுள்ளன
London: லண்டன் : இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழிலதிபர் விஜய் மல்லையா மோசடி செய்திருப்பதாக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. தான் கைது செய்யப்படக் கூடும் என்பதை உணர்ந்த அவர் கடந்த 2016 மார்ச் மாதத்தின்போது, இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருதற்கான முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான அவசியம் குறித்து மத்திய அரசு சார்பாக தி க்ரவுன் ப்ராசெக்யூஷன் சர்வீஸ் சட்ட நிறுவனம் லண்டன் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது.
குறிப்பாக மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அவரை மும்பை சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி எம்மா அர்பட்னாட் மும்பை சிறையின் காற்றோட்டம், வெளிச்சம் உள்ளிட்ட வசதிகள் குறித்து அறிய விரும்புவதாக கூறினார்.
இதையடுத்து மும்பை சிறையின் வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த பின்னர் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்த வழக்கில் முக்கிய உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது