This Article is From Oct 12, 2019

வேட்டி, சட்டை அணிந்து தமிழர் பாரம்பரியத்துடன் சீன அதிபரை வரவேற்ற மோடி!!

மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபருக்கு சுற்றிக் காண்பித்தார். இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சீன அதிபர் ஜிங்பிங்குடன் இரவு உணவை பகிர்ந்து கொள்கிறார் மோடி.

Mamallapuram:

சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை  அணிந்து மாமல்லபுரத்தில் வரவேற்றார். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் சீன அதிபருக்கு மோடி சுற்றிக் காண்பித்தார். 

சீன அதிபர் ஜி ஜிங்பிங் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை,கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். 

விமான நிலைய வரவேற்பை முடித்துக் கொண்ட பின்னர் சீன அதிபர் கிண்டியில் உள்ள சோழா ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்ட ஜிங்பிங், அங்கிருந்து நேராக மாமல்லபுரத்திற்கு கிளம்பினார். 

இதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரத்திற்கு வந்து, சீன அதிபரை வரவேற்க தயாராக இருந்தார். மாமல்லபுரத்தை சீன அதிபர் ஜிங்பிங் சாலை மார்க்கமாக சென்றடைந்தார். அங்கு அவரை தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டை அணிந்தவாறு பிரதமர் மோடி வரவேற்றார். 

வழக்கமாக குர்தா உடைந்திருக்கும் பிரதமர் மோடி இன்று முதன்முறையாக தமிழர் பாரம்பரியத்தில் வேட்டி சட்டையுடன் காட்சி அளித்தார். இது மிகவும் வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் அமைந்தது. வரவேற்ற பின்னர், ஜிங்பிங்கை மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் மோடி சுற்றிக் காண்பித்தார். 

அர்ஜூனன் தபசு, ஐந்து ரத கோயில் உள்ளிட்ட இடங்களில் இரு தலைவர்களும் கூட்டாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு இடத்தையும் பிரதமர் மோடி விளக்க, அதனை மிகுந்த கவனத்துடன் சீன அதிபர் கேட்டுக்கொண்டார்.

சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்ட இரு தலைவர்கள் இளநீரை அருந்தினர். இதன்பின்னர், கடற்கரை கோயிலுக்கு சீன அதிபரை அழைத்துச் சென்ற மோடி, அவரிடம் கோயில் மற்றும் சிற்பங்களின் வரலாற்றை எடுத்துரைத்தார். இதனை முடித்தபின்னர், இருவரும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். 

.