மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மேற்கு வங்கத்துடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக மம்தா கூறியுள்ளார்.
Kolkata: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வரவேண்டிய ரூ. 2,500 கோடியை அளிக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தெற்கு பரகான்ஸ் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது -
மேற்கு வங்க அரசுடன் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கு வங்க அரசுக்கு ரூ. 2,500 கோடி வர வேண்டியுள்ளது. இதனை அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
நமது மாநிலத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் இருப்பவர்களுக்கு பணம் வராமல் இருக்கலாம். அதற்கு மத்திய அரசே காரணம். கும்ப மேளாவுக்கு மிகவும் அதிகளவில் பணத்தை மத்திய அரசு செலவிடுகிறது. ஆனால் வளர்ச்சிக்காக செலவிடுவதில்லை.
மேற்கு வங்க அரசு செய்திருக்கும் வளர்ச்சி பணிகளை மத்திய அரசு பார்வையிட வேண்டும். இங்கு அனைத்து வசதிகளும் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளன. இவ்வாறு மம்தா கூறினார்.