P Chidambaram: இந்த விவகாரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
New Delhi: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய நேற்று மாலை புலனாய்வு அமைப்புகள் கையாண்ட விதத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்தது. அதைத் தொடர்ந்து சுமார் 24 மணி நேரத்துக்கு அவர் பொதுவெளியில் காணவில்லை. இப்படிபட்ட சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குச் சென்று செய்தியாளர்களை சந்தித்தார் சிதம்பரம்.
தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது கைது செய்யப்பட்டார். அப்போது, சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தைக் கைது செய்ய அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் வீட்டின் பிரதான நுழைவாயில் வழியாக சிபிஐ அதிகாரிகள் உள்ளே நுழைய அனுமதி கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் சிதம்பரம் வீட்டின் சுவரை ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் உள்ளே சென்றதாக தெரிகிறது.
எனினும், நாடு முழுவதும் சிபிஐ அதிகாரிகளின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஐ அதிகாரிகள் வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம். அது கண்டிக்கத்தக்கது.
கிட்டதட்ட 20 முறைக்கு மேல் சிபிஐ அதிகாரிகள் கூப்பிட்டபோதெல்லாம் அவர் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ப.சிதம்பரம் ஒரு மூத்த அரசியல் தலைவர், முன்னாள் நிதயமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர், அவரை கையாளப்படும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. அது மிகவும் மோசமானதாக இருக்கிறது. நான் இந்த விவகாரத்தின் சட்டப்பூர்வமான விஷயத்தை பற்றி பேசவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.