ஹைலைட்ஸ்
- இன்றிரவு சீனாவுக்குப் பயணப்பட இருந்தார் மம்தா
- இன்று மதியம் 2:30 மணிக்குதான் பயண ரத்து குறித்து தெரிவிக்கப்பட்டது
- சென்ற ஆண்டும் சீனப் பயணத்தை மம்தா, ரத்து செய்திருந்தார்
KOLKATA:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று இரவு சீனாவுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. இந்நிலையில், சீனத் தரப்பில் இந்த பயணம் குறித்து சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படாததால், விசிட்டை ரத்து செய்துள்ளார் மம்தா.
மேற்கு வங்கத்தில் முதலீடு செய்யச் சொல்லும் நோக்கில், சீன நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க 9 நாட்கள் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தார் மம்தா. இந்தப் பயணத்துக்குத் தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், சில காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா, மதியம் 2:30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்தப் பயண ரத்து குறித்து மம்தா, ‘சீனா - இந்தியா உறவில் நல்லிணக்கம் ஏற்படும் நோக்கில் அந்நாட்டுக்குப் பயணப்பட சம்மதித்திருந்தேன். நேற்று வரைகூட இந்த சந்திப்பு குறித்தான நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால், சீனத் தரப்பு இந்தப் பயணம் குறித்து சரியான ஒப்புதலைத் தரவில்லை. எனவே, வேறு வழியின்றி இந்தப் பயணத்தை ரத்து செய்கிறேன். இதையும் தாண்டி, இரு நாட்டு உறவும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுவே, இரு நாட்டுக்கும் நன்மை பயக்கும்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
மம்தாவின் சீனப் பயணம் ரத்தாவது இது முதல் முறை கிடையாது. கடந்த ஆண்டு, இந்திய - சீன எல்லையில் டோக்ளாம் பிரச்னை நிகழ்ந்து கொண்டிருந்த போது, அவர் சீனாவுக்குப் பயணப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால், அப்போது நிலைமை சரியில்லை என்று காரணம் கூறி, பயணத்தை ரத்து செய்தார் மம்தா.