மம்தாவுக்கு எதிர்கட்சிகளும், பல்வேறு மாநில கட்சிகளும் ஆதரவு தெரிவிதுள்ளன.
Kolkata: மேற்கு வங்கத்தில சாரதா சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் விசாரணை நடத்தினார். அவர் தற்போது கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார். நிதி நிறுவன மோசடி வழக்குகளை ராஜீவ் குமார் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்பட்டதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரிப்பதற்காகப் பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.
இந்நிலையில், ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க போலீஸாருக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று தகவல் அளித்துவிட்டு, சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, சிபிஐ அதிகாரிகளிடம் முறையான ஆவணங்கள் இருக்கிறதா போலீசார் கேட்க, இருதரப்பினருக்கும் வாக்குவாதம்
பின்னர், சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் நேற்று இரவில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மம்தாவுக்கு ஆதரவாக பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், முதலமைச்சர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் மம்தாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் மத்திய அரசை கண்டித்தும் மம்தாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு பணியாளர்களும் தற்போது இலக்காகி விட்டனர். மக்கள் பேசவே பயப்படுகின்றனர். மக்களின் ஜனநாயக உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது. ஜனநாயகம் சீர்குலைந்ததற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசே காரணம். பாஜகவை எதிர்ப்பவர்களை சிறையில் அடைப்பது தான் தற்போதைய மத்திய அரசின் நோக்கம் .
நான் சாவதற்கும் தயார். ஆனால் ஒருபோதும் மோடி அரசுக்கு அடிபணிய மாட்டேன். நாட்டில் அவசரநிலையை அமல்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தேசத்தை, ஜனநாயகத்தை, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வரையில் எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும். எனது தர்ணா போராட்டம் வரும் 8-ம் தேதி வரை தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.