Read in English বাংলায় পড়ুন
This Article is From Feb 05, 2019

மத்திய அரசுக்கு எதிரான தர்ணாவை கைவிட்டார் மம்தா பானர்ஜி!

மத்திய அரசுக்கு எதிராக 3 நாட்களாக நீடித்து வந்த தர்ணா போராட்டத்தை நிறைவு செய்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

Advertisement
இந்தியா
Kolkata:

மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் விசாரணை நடத்தினார். அவர் தற்போது கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார். நிதி நிறுவன மோசடி வழக்குகளை ராஜீவ் குமார் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்பட்டதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரிப்பதற்காகப் பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.

இந்நிலையில், ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, சிபிஐ அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் ஞாயிற்றுகிழமை இரவில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மம்தாவுக்கு பல்வேறு மாநில கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

Advertisement

இதனிடையே, மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சிபிஐ தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

பின்னர் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

இதையடுத்து, கொல்கத்தா காவல் ஆணையர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை என்றும் அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதையே எதிர்க்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது தர்ணா போராட்டத்தை முடித்துக்கொள்வதாக மம்தா அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவும், மம்தா பானர்ஜியும் இன்று மாலை இதனை தொண்டர்கள் மத்தியில் பேசும் போது அறிவித்தனர்.
 

Advertisement