தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கலைஞர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, திமுக (DMK) சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் சென்னையில் இன்று காலை அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை சென்னை, கோடம்பாக்கத்தில் இருக்கும் முரசொலி அலுவலகத்தில், கருணாநிதியின் திருவுருவச் சிலைத் திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கலைஞரின் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார். கலைஞர் பற்றி மம்தா, தமிழிலும் பேசினார்.
மம்தா, ‘திரு கருணாநிதி அவர்கள் இந்தியத் தாயின் தலைமகன்களில் ஒருவர். இந்திய அரசியலின் மேதாவி. தமிழக அரசியலின் தலைவர். தமிழக மக்களின் தந்தை போன்றவர். அவரது ஜனநாயகப் பார்வைக்கு நான் தலை வணங்குகிறேன்' என்று தமிழில் பேசி அசத்தினார்.
தொடர்ந்து அவர், ‘கருணாநிதியை என்னால் மறக்கவே முடியாது. கருணாநிதியை நாம் நினைவுகூறும் இந்த தருணத்தில், அவரது நடவடிக்கைகளுக்காக மட்டும் அவரை நினைக்கவில்லை. ஓராண்டு கடந்த பின்னரும் அவர் நமது இதயங்களில் வாழ்ந்து வருகிறார். 13 முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, எளிய மக்களுக்காகவும், சிறுபான்மையினருக்காகவும் போராடினார். அவரது போராட்டத்தை நாம் இன்று முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். நமது மண்ணுக்காக நாம் உயிரைக் கொடுக்கலாம். ஆனால் மண்ணை விட்டுக் கொடுக்க முடியாது. கருணாநிதி எப்போதும் மாநில உரிமைக்காகவும், சுயாட்சிக்காவும் போராடியவர். நான் இந்தியன். ஆனால் நான் வங்கத்தின் மகள். ஸ்டாலின் இந்தியன். ஆனால் அவர் ஒரு தமிழ் மகன். எனவே மாநில உரிமைகளுக்காக செய்படுவோம். கருணாநிதியின் பாதையைப் பின் தொடர்வோம்' என்று உரையாற்றினார்.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, 50 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளார். தமிழக முதல்வராக 5 முறை பதவியேற்றுள்ளார். மேலும் தான் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, எந்த தலைவர்களாலும் முறியடிக்க முடியாத வரலாற்று சாதனை படைத்தவர்.
அப்படிப்பட்ட, தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கலைஞர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து, 8 ஆம் தேதி அவரது உடல் லட்சக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், கலைஞரின் முதல் நாள் நினைவு தினம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது.