This Article is From May 27, 2020

'மகாராஷ்டிராவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ரயில்வே கொரோனாவை பரப்புகிறது' - மம்தா புகார்

ரயில்கள் எப்போது வரவேண்டும் என்பது குறித்த பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். ஆனால் திடீரென நேற்று எங்களிடம், 36 ரயில்கள் மேற்கு வங்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்று ரயில்வே கூறுகிறது. எந்தவொரு யோசனையும் மத்திய அரசிடம் இல்லை. ஆனால் அரசியல் மட்டும் செய்கிறது. 

'மகாராஷ்டிராவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ரயில்வே கொரோனாவை பரப்புகிறது' - மம்தா புகார்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேற்கு வங்கத்திற்கு 225 ரயில்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kolkata:

மகாராஷ்டிராவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ரயில்வே கொரோனாவை பரப்புவதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

மேற்கு வங்க அரசிடம் எந்தவொரு ஆலோசனையையும் பெறாமல், வெளி மாநில தொழிலாளர்களுக்காக ரயில்வே ரயில்களை இயக்குவதாகவும் மம்தா கூறியுள்ளார். இதனால் மேற்கு வங்கம் - மகாராஷ்டிரா இடையே மோதல் ஏற்படும் என்று தெரிவித்துள்ள மம்தா இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேற்கு வங்கத்திற்கு 225 ரயில்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இருந்து மட்டும் 41 ரயில்கள் வருகின்றன. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. 

தற்போது வரை மேற்கு வங்கத்திற்கு 19 ரயில்கள் வந்துள்ளன. இதனால் மால்டா, மூர்ஷிதாபாத், வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு. 

இன்னும் மற்ற ரயில்களும் வந்து விட்டால் நிலைமை மோசம் அடையும் என்ற அச்சத்தில் மேற்கு வங்க அரசு உள்ளது.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

ரயில்வே எதற்காக இப்போது இந்த காரியத்தை செய்கிறது என்று தெரியவில்லை. மேற்கு வங்கத்திற்கு வரும் 2 லட்சம்பேரை நம்மால் எப்படி பரிசோதனை செய்ய முடியும். இதற்கு மத்திய அரசு உதவி செய்யுமா?. நான் ஆம்பன் புயல் மற்றும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். மத்திய அரசு செய்யும் அரசியலுடனும் நான் போராட வேண்டுமா?

ரயில்கள் எப்போது வரவேண்டும் என்பது குறித்த பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். ஆனால் திடீரென நேற்று எங்களிடம், 36 ரயில்கள் மேற்கு வங்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்று ரயில்வே கூறுகிறது. எந்தவொரு யோசனையும் மத்திய அரசிடம் இல்லை. ஆனால் அரசியல் மட்டும் செய்கிறது. 

ரயில்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. நாங்கள் டிக்கெட்டிற்கு பணம் அளிக்கிறோம். இருப்பினும் எதற்காக ரயில்பெட்டிகளில் அதிகமானோர் இருக்க வைக்கப்படுகின்றனர்?.

மகாராஷ்டிராவில் இருந்து கொரோனாவை கிளப்பி, மேற்கு வங்கத்தில் பரவ விடுவதற்கான வேலையை ரயில்வே செய்கிறது. இந்த விவகரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு மம்தா தெரிவித்தார். 
 

.