மேற்கு வங்கத்தில் புதிய சாதனையை இந்த தேர்தலில் பாஜக நிகழ்த்தியுள்ளது.
Kolkata: மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் விழாவில் பங்கேற்பது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக 18 தொகுதிகளை இந்த தேர்தலில் கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சிக்கும், இங்கு முன்பு ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கும் ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. மோடியை கடுமையாக எதிர்த்த மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் இருந்தது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மோடிக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டு வந்தார்.
இருப்பினும் அவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கலவரங்களால் 7-ம் கட்ட வாக்குப்பதிவின்போது பிரசாரம் ஒரு நாளுக்கு முன்பாகவே மேற்கு வங்கத்தில் முடித்துக் கொள்ளப்பட்டது.
தொடர் பிரச்னைகளால் மேற்கு வங்க அரசுக்கும், மத்திய அரசுக்கும் இணக்கம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் என்கிற அடிப்படையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமார் மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, 'மற்ற மாநிலங்களின் முதல்வர்களுடன், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து பேசி வருகிறேன். அரசியலைமைப்பு சட்ட அடிப்படையில் மாநில முதல்வர்களுக்கு சில கடமைகள், பொறுப்புகள் இருக்கின்றன. பதிவியேற்பு விழாவில் பங்கேற்க முயற்சி செய்வேன்' என்றார்.