மோடி - மம்தா பானர்ஜி சந்திப்பு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
New Delhi: பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றம் செய்வது தொடர்பாகவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது.
மேற்கு வங்கத்தின் பெயரை 'பங்களா' என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று மம்தா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் உடனான சந்திப்பு குறித்து மம்தா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
மோடி உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. துர்கா பூஜை முடிந்ததற்கு பின்னர் மேற்கு வங்கத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மோடியுடன் விவாதித்தேன். மேற்கு வங்கத்தின் வளர்ச்சி விகிதம் 12.8 சதவீதமாக உள்ளது. நாட்டிலேயே அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. மாநிலத்தின் பொருளாதார நிலைமை குறித்து மோடியுடன் பேசினேன்.
எங்கள் மாநிலத்தின் பெயரை மாற்றவும் விரும்புகிறோம். மேற்கு வங்கம் என்பதை 'பங்களா' என்று மாற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாகவும் மோடியுடன் பேசினேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் மோடி - மம்தா இடையிலான வார்த்தைப் போர் அதிகரித்து வந்த நிலையில் இருவரது சந்திப்பு இன்று நடந்துள்ளது.