This Article is From Dec 20, 2018

‘ராகுல்தான் பிரதமராக வேண்டும்’ என்ற ஸ்டாலின் கருத்துக்கு மம்தா ரிப்ளை..!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் (Mamata Banerjee), ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

‘ராகுல்தான் பிரதமராக வேண்டும்’ என்ற ஸ்டாலின் கருத்துக்கு மம்தா ரிப்ளை..!
Kolkata:

சில நாட்களுக்கு முன்னர் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் முழு உருவச் சிலைத் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் எதிர்கட்சிகளின் கூட்டணிக்குப் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் (Rahul for PM)' என்று கூறினார். இது குறித்து மற்ற எதிர்கட்சிகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மம்தா (Mamata Banerjee) கூறுகையில், ‘அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து எடுக்கும் முடிவுக்கு நாங்களும் கட்டுப்படுவோம். இப்போது பிரதமர் வேட்பாளர் குறித்து பேசுவதற்கு உகந்த நேரமல்ல. அது குறித்து சரியான நேரத்தில் நாங்கள் முடிவெடுப்போம்' என்று கறாராக கூறிவிட்டார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்ட பல தேசிய அளவிலான தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், ‘பாசிச பாஜக ஆட்சியை ஒழிக்கும் திறன் ராகுல் காந்திக்கு உள்ளது. அவரது கரங்களை நாம் வளப்படுத்துவோம். நம் நாட்டை காப்பாற்றுவோம்' என்று பேசினார்.

ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ், ஃபரூக் அப்துல்லாவின் தேசிய கான்ஃபெரன்ஸ் கட்சி, லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

இதையடுத்து ஸ்டாலின் தனது கருத்துக்கு நியாயம் கற்பிக்கும் வகையில், ‘தமிழ்நாட்டை மோடி அரசு ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கிறது. அதனை வீழ்த்திட வேண்டும் என்றால் அதற்குரிய வலிமை கொண்டவரும், பாஜகவின் கோட்டையாக இருந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தவருமான ராகுல் காந்தியை முன்னிறுத்துவதுதான் மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும். அந்த அடிப்படையில்தான் ராகுல் காந்தியை முன்னிறுத்தி, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்று உரக்கச் சொன்னேன்' என்று கூறினார்.

.