This Article is From Feb 05, 2019

காங்கிரஸுக்கு நேசக்கரம் நீட்டும் மம்தா; மக்களவையில் கூட்டணியா..?

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு வங்கத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் கைது செய்தனர்.

காங்கிரஸுக்கு நேசக்கரம் நீட்டும் மம்தா; மக்களவையில் கூட்டணியா..?

மம்தா அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • பாஜக-வுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார் மம்தா
  • அதே நேரத்தில் காங்கிரஸுடன் இணக்கமாக மம்தா செயல்படவில்லை
  • ஆனால், தற்போது காங்கிரஸை நட்போடு அணுகியுள்ளார்
Kolkata:

மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு மம்தாவும் ரியாக்ட் செய்துள்ளார். இதனால், மீண்டும் காங்கிரஸுடன் திரிணாமூல் காங்கிரஸ் இணக்கமாக நடந்து கொள்ளுமா என்று எதிர்பார்ப்பு வந்துள்ளது. 

மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் போலீஸ் தரப்பில் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு வங்கத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் கைது செய்தனர். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மம்தா அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதே நேரத்தில், சிபிஐ விசாரணையை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிறு முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

ராகுல் காந்தி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளேன். மோடி மற்றும் பாஜக, அரசு அமைப்புகள் மீது நடத்துக்கும் தாக்குதலின் வெளிப்பாடே தற்போது மேற்கு வங்கத்தில் நடந்து வரும் சம்பவங்கள். மொத்த எதிர்கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு எதிராக நின்று, பாசிச அடக்குமுறையை வீழ்த்தும்' என்று காத்திரமான பதிவை இட்டுள்ளார். 

இதையொட்டி மம்தா தர்ணா போராட்டத்தில் பேசுகையில், ‘எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டியது கடமையாகும். தேசிய அளவில் காங்கிரஸுடன் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்' என்று பேசினார். மம்தாவின் இந்த கருத்து தற்போது தேசிய அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

.