கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Lucknow: கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நீதிமன்ற அறையில் விசாரணையின்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியான பிஜ்னோரின் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மதியம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜரானார். அப்போது, அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேர்ந்தபோது நீதிபதியும் அறையில் இருந்தார். துப்பாக்கிச் சூட்டின்போது அவரை நீதிமன்ற பாதுகாவலர்கள் பாதுகாத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஷானவாஸ் அன்சாரி என்பது தெரியவந்துள்ளது. அவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஹாஜி அஹ்சான் கான் மற்றும் அவரது உறவினர் கடந்த மே மாதம் கொல்லப்பட்ட சம்பவத்தில் அன்சாரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி சஞ்சீவ் தியாகி, 'ஷானவாஸ் அன்சாரி டெல்லியில் சரண் அடைந்தார். அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். டெல்லி போலீசார் இந்த பணியில் ஈடுபட்டனர். ஹாஜி அஹ்சன் கானின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் ஷானவாசை நீதிமன்ற அறையில் சுட்டுக் கொன்றனர். கொலைகாரர்களை நாங்கள் துரத்திப் பிடித்தோம். துப்பாக்கிச் சூட்டின்போது நீதிமன்ற ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்' என்று தெரிவித்தார்.
நீதிமன்ற அறையை உத்தரப்பிரதேச போலீசார் சூழ்ந்து கொள்வது போலவும், உயிரிழந்தவரின் சடலத்தை பையில் வைத்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றுவது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்தனர்.
கடந்த மே மாதம் 29-ம்தேதி 50 வயதான ஹாஜிஅஹ்சான் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் 2 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜ்னோரின் நாஜிபாபாத் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் நாஜிபாபாத் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக அஹ்சான் இருந்தார். அவருடன் கொல்லப்பட்டவரும் பகுஜன் சமாஜை சேர்ந்தவர்.
கொலைகள் நடந்ததற்கு அரசியல் காரணம் அல்ல என்றும், தொழில் போட்டியே இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.