This Article is From Jul 21, 2018

மாடு கடத்தல்காரர் என சந்தேகப்பட்டு ராஜஸ்தானில் ஒருவர் அடித்துக் கொலை!

ராஜஸ்தான் மாநில அல்வாரில், மாடு கடத்தல்காரர் என்று சந்தேகப்பட்டு, ஒருவர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்

Alwar, Rajasthan:

ராஜஸ்தான் மாநில அல்வாரில், மாடு கடத்தல்காரர் என்று சந்தேகப்பட்டு, ஒருவர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

அல்வாரில் இருக்கும் ராம்கர் கிராமத்தில் உள்ள பொது மக்கள் சிலர், அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாடுகளை ஓட்டிச் சென்றதைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மாட்டை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகப்பட்டுள்ளனர் கிராம மக்கள். இதனால் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அக்பர் கான் என்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

4 நாட்களுக்கு முன்னர் தான் உச்ச நீதிமன்றம், 'மாட்டை காப்பதற்காக என்று கூறிக் கொண்டு சட்டத்தை பொது மக்கள் கையில் எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனியும் அதைப் போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. அரசு இது குறித்து கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். இறும்புக் கரம் கொண்டு தாக்குதல் நடத்துபவர்களை ஒடுக்கிட வேண்டும்' என்று கூறியது.

இந்நிலையில், மீண்டும் இதைப் போன்ற சம்பவம் நடந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். அதே நேரத்தில், சட்ட ஒழுங்கை மாநில அரசுதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மத்திய அரசு உதவி செய்யும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

.