911 என்ற அவசர உதவி எண்ணிற்கும் தகவல் அனுப்பியுள்ளது ஆப்பிள் வாட்ச்.
San Francisco: வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவன டெக்னாலஜி ஒன்று ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகணத்தைச் சேர்ந்தவர் கபே பர்டெட். இவர் தனது தந்தையை சந்திப்பதற்காக ரிவர்சைடு ஸ்டேட் பூங்கா என்ற இடத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தையின் ஆப்பிள் வாட்சில் இருந்து அவருக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.
அதில் அவரது தந்தைக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், அவர் இருக்கும் இடத்தின் லொகேஷனையும் அனுப்பியுள்ளது. ஆனால் கபே அந்த இடத்திற்கு விரைந்தபோது அவரது தந்தையை அங்கு காணவில்லை. அதற்குள் அந்த வாட்ச் அருகில் இருந்த மருத்துவமனைக்குத் தகவல் அளித்ததன் பேரில் அவரை மீட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அந்த இருப்பிடத்தையும் வாட்ச், கபேவுக்கு அனுப்பியுள்ளது. மேலும் 911 என்ற அவசர உதவி எண்ணிற்கும் தகவல் அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் 30 நிமிட நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகன் கபேவுக்கு உடனடியாக தந்தையின் நிலைமை குறித்து மெஸேஜ் வந்துள்ளது.
தற்போது தனது தந்தை நலமுடன் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். ஆப்பிள் வாட்சின் உதவியால் தனது தந்தை காப்பாற்றப்பட்டதாக நன்றி தெரிவித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கபே.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த டெக்னாலஜியால் தனது தந்தை காப்பாற்றப்பட்டதை நினைத்து வியந்து பாராட்டியுள்ளார். தனது அப்பா ஆப்பிள் வாட்சை வைத்திருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இவரது பேஸ்புக் பதிவை டிவிட்டர் பக்கத்தில் பலரும் ஷேர் செய்துள்ளனர்.
கபேவின் பதிவைப் பார்த்த ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் லைக் செய்துள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.