Baby Buried, found Alive- கேட்போரை உறையவைக்கும் இச்சம்பவம் குறித்து அடுத்தடுத்து அத்ர்ச்சி கிளப்பும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
Bareilly, Uttar Pradesh: உத்தர பிரதேச மாநிலத்தின் பரேலியைச் சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோஹி. அவர், பிறந்த சில நிமிடங்களில் இறந்துபோன தனது சிசுவைப் புதைக்க குழிதோண்டியுள்ளார். அந்த குழிக்குள், மண் பானையில் இன்னொரு சிறு வயதுக் குழந்தை உயிரோடு இருந்திருக்கிறது. கேட்போரை உறையவைக்கும் இச்சம்பவம் குறித்து அடுத்தடுத்து அத்ர்ச்சி கிளப்பும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இது குறித்து உ.பி-யின் எஸ்.பி அபினந்தன் சிங், “பேரலியைச் சேர்ந்த துணை ஆய்வாளர்தான் சிரோஹியின் மனைவி வைஷாலி. கடந்த புதன் கிழமை அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கும் குறைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை இறந்துவிட்டது.
இதற்கு அடுத்த நாள் சிரோஹி, சிசுவைப் புதைக்க சென்றுள்ளார். தன் இறந்த குழந்தையைப் புதைக்க அவர் குழி தோண்டிய போது, அந்த குழிக்குள் இன்னொரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. சுமார் 3 அடிக்குக் கீழ் அந்த குழந்தை மண் பானைக்குள் இருந்தது. அந்த குழந்தை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அந்த குழந்தையின் உயிரை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். தற்போது அதன் தாய் யார் என்று விசாரித்து வருகிறோம்.” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
பிதாரி சயின்பூரைச் சேர்ந்த எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் மருத்துவ செலவுக்குப் பொறுப்பேற்று கொள்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.