போலீஸ் கூறும் தகவல்படி, கடந்த ஞாயிற்றுக் கிழமை விரார் ரயில் நிலையத்துக்கு 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் வந்துள்ளனர்.
Mumbai: மும்பையில் சில நாட்களுக்கு முன்னர் ரயில் நிலையம் ஒன்றில் கர்ப்பிணிப் பெண் ஒருவர், இடுப்பு வலியால் அவதியுற்றுள்ளார். அவருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ரயில் நிலையத்துக்கு உள்ளேயே ஆட்டோ ஓட்டிச் சென்றுள்ளார் ஒருவர். இதற்கு அந்த நபர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மும்பையின் விரார் ரயில் நிலையத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆட்டோ ஓட்டியவர் பெயர் சாகர் கம்லாகர் காவத் என்றும் அறியப்பட்டுள்ளது.
போலீஸ் கூறும் தகவல்படி, கடந்த ஞாயிற்றுக் கிழமை விரார் ரயில் நிலையத்துக்கு 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் வந்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு திடீரென்று இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது.
“தனது மனைவியின் நிலையைப் பார்த்த அந்த கணவர், கம்பார்ட்மென்ட்டில் இருந்து வெளியேறி உதவி கேட்க சென்றார். அப்போதுதான் ஆட்டோ ஒன்று அருகிலேயே இருப்பதைப் பார்த்துள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநரும் ஃபிளாட்பாரத்துக்கு உள்ளேயே வந்து கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக் கொண்டு அருகில் இருக்கும் சஞ்சீவனி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்” என்று சம்பவம் குறித்து விளக்குகிறார் ரயில்வே போலீஸான பிரவீன் குமார் யாதவ்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு, மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்துதான் காவத்தை அடையாளம் கண்டுபிடித்து ரயில்வே போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் அவர் நீதிமன்றம் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், வெறுமனே எச்சரிக்கை மட்டும் செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். “என்னதான் காவத் செய்தது நல்லெண்ண அடிப்படையில் என்றாலும், ஃபிளாட்பாரத்தில் ஆட்டோ ஓட்டுவதால் யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனாலேயே அவர் கைது செய்யப்பட்டார்” என்கிறார் யாதவ்.