டெல்லி விமான நிலையத்திலிருந்து நியூயார்க் செல்வதற்காக அந்த நபர் சக்கர நாற்காலியில் வந்தார்.
New Delhi: டெல்லி விமான நிலையத்திலிருந்து 81 வயது முதியவர்போல் வேடமிட்டு போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல இருந்த இளைஞர் ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.
அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32). இவர் டெல்லியில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் நியூயார்க் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக, அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து 81 வயது முதியவர் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக தாடி, தலைமுடி என அனைத்தையும் வெள்ளை நிற டை அடித்துக் கொண்டார். மேலும் டெல்லி விமான நிலையத்திற்கு வீல் சேரில் வந்துள்ளார்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு முதியவர் போல் வேடமிட்டு சக்கர நாற்காலியில் வந்த ஜெயேஷ் படேல் நியூயார்க் விமானத்தில் ஏற இருந்தார்.
அப்போது, பயணிகளை சோதனையிடும் வழக்கமான நடைமுறையின்படி அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதில், பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதுக்கும் அவரது தோற்றத்துக்கும் பெருமளவு வேறுபாடு இருந்ததை கண்டு அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, உடனடியாக அவரை அழைத்து சென்ற அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் 32 வயது இளைஞர் என்பதும் முதியவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து நியூயார்க் செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதுக்கும் அவரது தோளின் தன்மைக்கும் பெருமளவு வேறுபாடு இருந்தது. அதில் எந்த சுருக்கமும் இல்லாமல் இளம் வயதுடையவர் போன்று தெரிந்தது.
மேலும் அவரது வயதுக்கு அவர், ஜீரோ பவர் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.
தொடர்ந்து, அவரிடம் எதற்காக ஆள்மாறாட்டம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.