This Article is From Jun 29, 2018

திரிபுராவில் குழந்தை கடத்துபவர் என சந்தேகப்பட்டு,ஒருவர் அடித்துக் கொலை!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின், முரபாரி மாவட்டத்தில் குழந்தை கடத்துபவர் என்று சந்தேகிக்கப்பட்டு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

ஹைலைட்ஸ்

  • சில நாட்களுக்கு முன்னர் இரண்டு சிறுவர்கள் திரிபுராவில் கொல்லப்பட்டனர்
  • இதையடுத்து, குழந்தை கடத்துபவர்கள் பற்றிய வதந்தி பரபரப்பப்பட்டது
  • கும்பல் தாக்கியதால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்
AGARTALA:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின், முரபாரி மாவட்டத்தில் குழந்தை கடத்துபவர் என்று சந்தேகிக்கப்பட்டு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

திரிபுராவில் கடந்த செவ்வாய் கிழமை 4 ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன், கொலை செய்யப்பட்டு, அவன் வீட்டு அருகில் தூக்கியெறியப்பட்டிருந்தான். அதைப் போலவே மோஹன்பூர் பகுதியில் 11 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான். இந்தக் கொலைக்கு யார் காரணம் என்று இதுவரை தெரியாத நிலையில், முரபாரி மாவட்டத்தில் ஒரு குறுஞ்செய்தியில் வதந்தி பரவியுள்ளது. 

உத்தர பிரதேசத்திலிருந்து திரிபுராவுக்கு வந்து தங்கியிருக்கும் மூவர் தான் குழந்தை கடத்துபவர்கள் என்று வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இதை நம்பி உ.பி-யைச் சேர்ந்த ஜாகிர் கான், குல்சார் மற்றும் குர்ஷித் கான் ஆகியோரை குறி வைத்துள்ளது முரபாரி மாவட்டத்தின் உள்ளூர் கும்பல். அவர்களை குறிவைத்து துரத்திச் சென்றுள்ளது அந்த கும்பல். இதையடுத்து அச்சமடைந்த மூவர், திரிபுரா ரைஃபல் கேம்ப் படை இருக்கும் இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு சில காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

ஒரு கும்பலே மூவருக்கு எதிராக வருவதைப் பார்த்த காவலர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டு கலைந்து போகச் சொல்லி மிரட்டியுள்ளனர். ஆனால், ஆக்ரோஷமான கும்பல், காவலர்களைத் தாக்கிவிட்டு மூவரையும் கொடூரமாக அடித்துள்ளது. இதனால், ஜாகிர் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குல்சார் மற்றும் குர்ஷித் கான் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றனர். காவலர்கள் சிலருக்கும் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஸ்மிருதி ரஞ்சன் தாஸ் , ‘பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஆனால் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலில் இருந்ததால், பாதுகாப்புப் படையால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. மேலும், தப்பி வந்த மூவரில் ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்’ என்று கூறினார்.

இந்த சம்பவத்தை அடுத்து மாநில போலீஸின் தலைவர் ஏ.கே.சுக்லா, மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க குறுஞ்செய்தி மற்றும் இணைய சேவையை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் நடந்ததை அடுத்து, மாநில அரசு சார்பில், வதந்திகளைப் பரப்பாமல் இருக்க சிலர் மூலம் விழிப்புணர்வு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படி விழிப்புணர்வு கொடுத்த ஒருவரையும் தெற்கு திரிபுராவில் ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது.

அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடந்துள்ளதால் திரிபுராவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

.