தேனி (பிடிஐ): தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், அவரது மனைவிக்கு வீட்டிலேயே இயற்கை முறை பிரசவம் பார்த்துள்ளார்
இந்த தகவலை அறிந்த மருத்துவ குழுவினர் கண்ணனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இயற்கை முறை பிரசவத்தின் ஆபத்துக்களை குறித்து மருத்துவ குழுவினர் விவரித்துள்ளனர். ஆனால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்க மறுத்த கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், தாய்க்கும் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க வந்த மருத்துவர்களை வீட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும், கண்ணனின் மனைவிக்கு வீட்டிலேயே இயற்கை பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து, குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடியை அறுக்காமல் இருந்துள்ளனர். தாயும் - குழந்தையும் மருத்துவ பரிசோதனைக்கும் செல்லாமல் இருந்துள்ளனர். இதனால், கண்ணனின் வீட்டிற்கு சென்ற மருத்துவ குழுவினரும், காவல் துறையினரும், குழந்தையின் நஞ்சுக்கொடியை அகற்றி, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கட்டாயமாக தெரிவித்துள்ளனர்.
அதற்கு கணவன் - மனைவி, அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஆங்கில மருத்துவ முறைப்படி அல்லாது சித்த மருத்துவ முறையில் குழந்தைக்கு பரிசோதனை செய்ய கண்ணனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அதனை தொடர்ந்து, குழந்தைக்கு சித்த மருத்துவ முறையில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் கோடாங்கிபட்டியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம், திருப்பூரைச் சேர்ந்த தம்பதியர், யூ-ட்யூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ள முயன்ற போது விபரீதம் நடைப்பெற்றது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், வீட்டிலேயே அவர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வுகள் இன்னும் நீங்கவில்லை. இதுனை தொடர்ந்து, இயற்கை பிரசவத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)