ஹைலைட்ஸ்
- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது
- வீடியோவை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஒரு ஓட்டலில் விடுமுறைக்காக வந்துள்ளனர் ஆப்ரிக்க அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கார்ல் வீலரும் அவரது 5 வயது பெண் குழந்தையும். எல்லோரையும் போல ஓட்டலில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு 5 வயது குழந்தையுடன் வந்துள்ளார் வீலர். அப்போது, ஓட்டலில் தங்கியுள்ள இன்னொரு வெள்ளை இன நபர், 'நீங்கள் குளித்துவிட்டு நீச்சல் குளத்தில் இறங்குகள்' என்று அநாகரிகமாக பேசியுள்ளார்.
இதற்கு வீலர், 'எங்களைப் பற்றி முன் முடிவுடன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு நீங்கள் யார்?' என்று ஆதங்கப்படுகிறார். அதற்குள் ஓட்டலின் வேலை செய்யும் ஒரு பெண் அங்கு வருகிறார். இருவருக்கும் இடையில் என்னப் பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர், 'ஒன்றுமில்லை. அவர்கள், குளித்துவிட்டுத் தான் குளத்தில் இறங்குகிறார்களா என்று கேட்டேன். அது நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு விதியின் ஒரு பகுதி தானே. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நீச்சல் குளத்தை குளிக்கும் இடமாக நினைத்து நேரடியாக இறங்குவது எனக்குப் பிடிக்காது' என்கிறார். அதற்கு வீலர், 'ஏன் எங்களைப் பார்த்து மட்டும் இதைக் கேட்கிறீர்கள். ஏன் நீச்சல் குளத்திற்கு வந்துள்ள மற்றவர்களிடம் இதைக் கேட்கவில்லை' என்கிறார். அதற்குள் ஓட்டலின் மேலாளர் அங்கு வந்துவிடுகிறார். 'சார், நீங்கள் உடனே இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள். இல்லையென்றால் காவலர்களை அழைக்க வேண்டியிருக்கும்' என்று கூறி அந்த நபரை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்துகிறார்.
இதைப் பார்க்கும் வீலர், 'அவர் என்னையும் என் 5 வயது குழந்தையையும் மட்டும் குறி வைத்து 'குளித்தீர்களா?' என்று உள்நோக்கத்துடன் கேட்கிறார். அவரை எப்படி நீங்கள் போக விடலாம்' என்று கொதிக்கிறார். அதற்கு மேலாளர், 'அவர் கேட்டது மிக அநாகரிகமான கேள்வி தான். அவரிடம் நான் கண்டிப்பாக விசாரணை நடத்துகிறேன்' என்று பதலளிக்கிறார். இந்த அனைத்து சம்பவத்தையும் ஒரு வீடியோவாக எடுத்து கார்ல் வீலர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகிறார்.
அந்த வீடியோவுடன், 'என்னை நிறவெறியுடன் பேசிய நபரிடம், கருப்பாக இருப்பது ஒன்று நோயல்ல என்றும், குளித்தாலும் கருப்புத் தோல் மறையாது என்றும் புரியம்படி கூறினேன். ஓட்டல் மேலாளர், அந்த நபரை போகவிட்டதும் என்ன மாதிரியான அணுகுமுறை என்று எனக்குத் தெரியவில்லை. என் 5 வயது குழந்தையிடம் இந்த மொத்த சம்பவத்தையும் சொல்லிப் புரிய வைத்தது தான் எனக்கு மிகவும் மன வருத்தத்தைத் தந்தது. 2018 ஆம் ஆண்டிலும், நன்கு படித்து, நல்ல வீடு வாங்கி, நல்ல கார் ஓட்டி, நல்ல வேலை செய்தாலும் நம் உடலின் நிறத்தை வைத்து மட்டுமே மதிப்பிடுபவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை அவளுக்கு எடுத்துக் கூறினேன்' என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
வீலர் ஃபேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்த வீடியோவை 20 லட்சத்துக்கும் மேலானவர்கள் பார்த்து, நிறவெறிக்கு எதிராக தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)