தாத்தாவே, பேத்தியை கல்லால் அடித்துக்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
Coimbatore: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மகன் மற்றும் மருமகளை பழிவாங்கும் நடவடிக்கையாக 10 மாத பேத்தியை தாத்தாவே கல்லால் அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்தவர் செல்வராஜ் (44). இவரது முதல் மனைவி பிரிந்து செல்லவே, 2-வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, 2வது மனைவியும் தற்போது பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது.
இரண்டு மனைவிகளும் தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கு மகனும், மருமகளுமே காரணம் என்று சந்தேகித்த செல்வராஜ் அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் செல்வராஜின் மகன் மற்றும் மருமகள் தங்களது 10 மாத குழந்தையை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் சந்தேகத்தின் பேரில் செல்வராஜை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், செல்வராஜ் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மகன் மற்றும் மருமகள் மீதான கோபத்தில், அவர்களை பழிவாங்கும் நோக்கில் 10 மாத பேத்தியை கல்லால் அடித்துக்கொன்றதாக செல்வராஜ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கிணத்துக்கடவில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் ஒரு பேக்கரிக்கு பின்னால் குழந்தையின் உடலை மூடி வைத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து குழதந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.