Read in English
This Article is From Aug 30, 2018

உ.பி-யில் மாடு திருடியதாக சந்தேகப்பட்டு வாலிபர் அடித்துக் கொலை..!

ஷாருக் கான் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உள் காயங்கள் காரணமாகத்தான் இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா ,
Bareilly:

துபாயிலிருந்து உத்தர பிரதேசத்தில் இருக்கும் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய 22 வயது வாலிபரை, எருமை மாடு திருட வந்தவர் என்று சந்தேகப்பட்டு கொடூரமாக தாக்கியுள்ளது ஒரு கும்பல். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஷாருக் கான் என்ற அந்த நபர் இறந்துவிட்டார்.

பரேல்லி மாவட்டத்தில் உள்ள போல்பூர் ஹிந்தோலயா என்ற கிரமாத்தில் செவ்வாய் கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து காவல் துறைக்கு தவகல் அளித்த கிராமத்தினர், ‘ஷாருக் கான் மற்றும் அவரது 3 நண்பர்கள் எருமை மாடுகளை திருட முயன்றனர்’ என்று கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்த ஷாருக் கானை, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அபிநந்தன் என்கிற மூத்த போலீஸ் அதிகாரி, ‘எங்களுக்கு சம்பவம் குறித்து கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளான நபரை நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர், போதை மருந்து பழக்கமுடையவர் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது அவர் அதிக போதையில் இருந்துள்ளார். அவர் வெகு நாட்களாக போதை மருந்து பயன்படுத்தி வந்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

அதே நேரத்தில் ஷாருக் கான் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உள் காயங்கள் காரணமாகத்தான் இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் போதை மருந்து இருந்ததற்கான தடயங்கள் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை குறித்து அபிநந்தன், ‘உடற்கூறு அறிக்கையில், அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்றுதான் தகவல் வந்துள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருக்கும் ஒரு எம்ப்ராய்டரி நிறுவனத்தில் ஷாருக் கான் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்துக்கு முன்னர்தான் அவர் உத்தர பிரதேசத்தில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஷாருக் கானின் சகோதரர், ஃபிரோஸ், ‘ஷாருக் கானுக்கு அவன் நண்பன் ஒருவனிடமிருந்து போன் மூலம் அழைப்பு வந்தது. வெளியே சென்ற ஷாருக் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை’ என்றார். பிறகு காலையில்தான் போலீஸிடமிருந்து ஷாருக்கின் குடும்பத்துக்கு போன் அழைப்பு வந்துள்ளது.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஒரு வழக்கு, 25 பேர் சேர்ந்து ஷாருக் கானை கொலை செய்ததற்கு. இன்னொரு வழக்கு, எருமை மாடு திருடியதற்காக போடப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது வழக்கில் ஷாருக் கான் மற்றும் அவரது 3 நண்பர்களின் பெயர் எஃப்ஐஆர்-ல் பதிவாகியுள்ளது.

தனது சகோதரர் குறித்து ஃபிரோஸ், ‘ஷாருக், துபாய் மற்றும் பிற வளைகுடா தேசங்களில் வேலை செய்துள்ளார். அவன் இதுவரை எந்த தவறான செயல்களிலும் ஈடுபட்டதில்லை’ என்று குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

Advertisement