This Article is From Sep 17, 2018

பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை தாக்கும் பாஜகவினர்

பெட்ரோல் விலை சென்னையில் 85.31 ரூபாயாகவும், கடலூரில் 87.03 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது

தமிழிசை பின்னால் நின்ற ஆட்டோ ஓட்டுநர் கேள்வி எழுப்பியுள்ளார்

Chennai:

பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை தாக்கும் பாஜகவினர் - பரபரப்பு வீடியோ
 தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி அளிக்கும்போது பெட்ரோல் விலை தினமும் ஏறுவதாக தெரிவித்த ஆட்டோ ஓட்டுநரை பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று இரவு, சைதாப்பேட்டையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழிசை கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிக்கும்போது, பின்னால் நின்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் “அக்கா ஒரு நிமிடம்.. பெட்ரோல் விலை தினமும் உயருது” என்று தன் கருத்தை தெரிவித்தார்

அதற்கு தமிழிசை பதில் எதுவும் கூறாமல் சிரித்துக் கொண்டே மழுப்பினார். உடனே சுதாரித்துக் கொண்ட பாஜகவினர், தமிழிசை இருக்கும் போதே, கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவரை பின்னால் இழுத்து சென்றனர். அவரை வேகமாக இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. இதற்கு சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

இது குறித்த விசாரணையில், கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரின் பெயர் கதிர் என்பது தெரியவந்துள்ளது. “நான் என் கருத்தை தெரிவித்தேன். ஆனால், பாஜகவினர் அதை தவறாக புரிந்து கொண்டனர். பெட்ரோல் விலை உயர்வால் தொழில் செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்

808no7r4

தமிழிசை பின்னால் நின்ற ஆட்டோ ஓட்டுநர் கேள்வி எழுப்பியுள்ளார்

இந்த சம்பவம் குறித்து தமிழிசை பேசுகையில், “கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மது அருந்தி இருக்கக் கூடும் என்று பாஜக உறுப்பினர்கள் எண்ணியதால், அவரை இழுத்துச் சென்றனர். அவரை தாக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்

பெட்ரோல் விலை சென்னையில் 85.31 ரூபாயாகவும், கடலூரில் 87.03 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதற்கு, பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

இதைப்போல, கடந்த சனிக்கிழமை நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது

.