நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்திக்கும் மேனகா காந்தி.
New Delhi: தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 4 பேர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கடுத்த சில மணி நேரங்களில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தி, இந்த சம்பவம் மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.
பெண் கால்நடை மருத்துவர் கொல்லப்பட்ட இடத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிச் செல்ல முயன்றார்கள் என்றும் இதையடுத்து என்கவுன்ட்டர் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேனகா காந்தி கூறியதாவது-
இன்று நடந்திருக்கும் என்கவுன்ட்டர் என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். சட்டத்தை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். விசாரணை நடைபெறுவதற்கு முன்பே போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளது என்றால், நீதிமன்றம், போலீஸ், சட்ட அமைப்புகள் எதற்காக இருக்க வேண்டும்?. இனி துப்பாக்கியை எடுத்து எவரை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்லலாம்? அப்படித்தானே!
இவ்வாறு மேனகா காந்தி கூறியுள்ளார். அவர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னர் குற்றம் சாட்டபவர்கள் இன்று காலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கால்நடை மருத்துவர் உயிரிழந்த அதே இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
என்கவுன்ட்டரில் முகம்மது ஆரிப் (26), ஜோலு சிவா (20), ஜோலு நவீன் (20), சிந்தகுண்டா சென்னகேஷாவுலு (20) ஆகிய குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
விசாரணையின்போது, போலீசாரின் ஆயுதங்களை பறித்து தாக்குவதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் முயன்றதாகவும், இதையடுத்து நடந்த என்கவுன்ட்டரில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். மருத்துவ ரீதியில் அவர்களுக்கு உதவி கிடைப்பதற்கு முன்பாக அவர்களது உயிர் பிரிந்துள்ளது.
கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உயிரிழந்த பெண்ணின் தந்தை உள்பட ஏராளமானோர் தெலங்கானா போலீசாரின் நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். 'எனது மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. நான் எனது நன்றியை காவல்துறை மற்றும் தெலங்கானா அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது எனது மகளின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்' என்று அவர் கூறியுள்ளார்.
பிரபல நடிகர் ரிஷி கபூர், பேட்மின்ட்டன் வீராங்கனை சாய்னா நெவால் உள்ளிட்டோரும் போலீசாரை பாராட்டியுள்ளனர்.
இருப்பினும் காங்கிரசின் கார்த்தி சிதம்பரம் என்கவுன்ட்டர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 'உயிர்களைக் கொல்வது என்பது நமது அமைப்பில் ஏற்பட்டிருக்கும் கறை. பலாத்காரம் ஒரு கொடூரமான குற்றம். இதனை சட்டத்தின் அடிப்படையில்தான் கையாள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நான் கருத்துக் கூறவில்லை. என்கவுன்ட்டர் மூலம் உயிர்களைக் கொல்வது என்பது நமது அமைப்பில் ஏற்பட்டிருக்கும் கறை. அதே நேரத்தில் நீதி உடனடியாக கிடைக்க வேண்டும். என்கவுன்ட்டர் சரியான தீர்வல்ல.' என்று கார்த்தி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.