நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், உத்தர பிரதேச சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டார் மேனகா.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள இரண்டாவது ஆட்சியில், நாடாளுமன்ற உறுப்பினரான மேனகா காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. அவருக்கு இடைக்கால சபாநாயகர் பதவி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அமைந்த 4 மத்திய அரசுகளில், மேனகா காந்தி அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியுடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுடன் அவர் இடம்பெறவில்லை.
மேனகா காந்தி, லோக்சபாவின் இடைக்கால சபாநாயகராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது மற்றும் முதல் மக்களவைக் கூட்டத்தை நடத்துவது உள்ளிட்டவையை பார்த்துக் கொள்வார். முதல் மக்களவைக் கூட்டத்தின் போதுதான், சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், உத்தர பிரதேச சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டார் மேனகா. அவர் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை வெற்றிவாகை சூடினார். சுல்தான்பூரின் முன்னாள் எம்.பி.,-யாக இருந்தவர் மேனகாவின் மகன் வருண் காந்தி. இந்த முறை வருண் காந்தி, ஃபிலிபிட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேனகா காந்தியின் கணவர், சஞ்சய் காந்தி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் ஆவார். அவர் சோனியா காந்தியின் கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் சகோதரரர் ஆவார்.
தேர்தல் பிரசாரத்தின்போது மேனகா, “நான் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவேன். ஆனால் அந்த வெற்றி முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாமல் இருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
விலங்குகள் நல செயற்பாட்டாளரான மேனகா, இதற்கு முன்னர் சமூக நீதித் துறை, கலாசாரத் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் பெண்கள் நலத் துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்.