அசாமில் இருந்து மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
New Delhi: மாநிலங்களவை தேர்தலில் மன்மோகன் சிங் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படுவா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மன்மோகனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து அவரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுப்பது குறித்து காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகிறது.
திமுக தரப்பில் மாநிலங்களவைக்கு மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுசவின் சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னொரு சீட் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பாக வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் ஸ்டாலின், மன்மோகன் சிங்கை திமுக தரப்பில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக்க உறுதி அளித்திருந்தார் என்று பரவலாக பேசப்பட்டது.
மன்மோகன் சிங்கை வேட்பாளராக நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ அல்லது அவரது தாயார் சோனியா காந்தியோ ஸ்டாலினிடம் நேரடியாக பேசவில்லை. அவர்களுக்கு பதிலாக குலாம்நபி ஆசாத் மற்றும் அகமது படேல் ஆகியோர்தான் முயற்சி மேற்கொண்டனர். இதனால் ஸ்டாலின் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
முன்னதாக அசாம் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் மாநிலங்களவைகு தேர்வு செய்யப்பட்டிருந்தார். தமிழகத்தில் திமுக வாய்ப்பு வழங்காத நிலையில் குஜராத்தில் இருந்து மன்மோகனை மாநிலங்களவை எம்.பி.யாக்கலாமா என காங்கிரஸ் பரிசீலிக்கிறது.
இதேபோன்று ராஜஸ்தான் மாநிலமும் காங்கிரஸ் மேலிடப் பார்வையில் உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் மாநிலங்களவை உறுப்பினரும், மாநில பாஜக தலைவருமான மதன் லால் சைனி காலமானார். இதனால், அங்கு மாநிலங்களவை எம்.பி. சீட் காலியாக உள்ளது.
அவரது பதவிக் காலம் ஏப்ரல் 2024 வரை நீடிக்கிறது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதால் அக்கட்சியால் மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்ய முடியும். இதனால் மன்மோகனை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு அனுப்பும் எண்ணத்தில் இருக்கிறது காங்கிரஸ்.