This Article is From Oct 15, 2019

Nobel Winner: பொருளாதார மாணவராக எனக்கு பெரும் மகிழ்ச்சி: அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் வாழ்த்து!

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் கொள்கை வகுப்பிற்கு அபிஜித் பானர்ஜியின், பொருளாதார வளர்ச்சி முன்னோடி கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

Nobel Winner: பொருளாதார மாணவராக எனக்கு பெரும் மகிழ்ச்சி: அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் வாழ்த்து!

காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். (File)

New Delhi:

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகியோர் கணவர்-மனைவியாவர்.

சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்காக அவர்களது பொருளாதார ஆய்வு சிறப்பாக உதவியதை கெளரவித்து நோபல் பரிசுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிஜித் பானர்ஜி (58) மேற்கு வங்கத்தில் பிறந்தவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்த அபிஜித், பின்னர் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், 1988-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். வளர்ச்சிப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவரான பானர்ஜி, தற்போது மாசசூசெட்ஸ் ஆய்வுக் கல்வி நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.

இந்நிலையில் அபிஜித் பானர்ஜிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் நீங்கள் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் உங்களது மனைவி எஸ்தர் டஃப்லோவும் நோபல் பரிசு பெற்றது மேலும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

வறுமை ஒழிப்பிற்காக நீங்கள் நடத்திய ஆய்வுப் பணிகள் மிகவும் சிறப்பானது. இதில் உள்ள சில புதிய முறைகள் வறுமை ஒழிப்பிற்கு மிகவும் முக்கியமானது. வளர்ச்சி சார்ந்த பொருளாதார ஆய்வுகளை அங்கீகரித்து நோபல் பரிசு வழங்கப்பட்டது ஒரு பொருளாதார மாணவராக எனக்கு பெரும் இன்பத்தை தந்துள்ளது. உங்களுடைய எதிர்கால ஆய்வுப் பணிகளும் வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் கொள்கை வகுப்பிற்கு அபிஜித் பானர்ஜியின், பொருளாதார வளர்ச்சி முன்னோடி கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
 

.