This Article is From Mar 16, 2019

அருண் ஜெட்லிக்கு விருது கொடுத்த மன்மோகன் சிங்… வரிந்துகட்டும் பாஜக!

பிசினஸ்லைன் நிறுவனம் சார்பில், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு ‘சேஞ்ச்மேக்கர்’ விருதுகள் வழங்கப்பட்டன.

அருண் ஜெட்லிக்கு விருது கொடுத்த மன்மோகன் சிங்… வரிந்துகட்டும் பாஜக!

ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அந்த விருதை வாங்கிக் கொண்டார்.

New Delhi:

பிசினஸ்லைன் நிறுவனம் சார்பில், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு ‘சேஞ்ச்மேக்கர்' விருதுகள் வழங்கப்பட்டன. அதில், ஜிஎஸ்டி வரி முறையை அறிமுகம் செய்த காரணத்திற்காக, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு விருது வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அந்த விருதை வாங்கிக் கொண்டார். ஜெட்லிக்கு விருது வழங்கியது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங். 

காங்கிரஸ் கட்சி, ஜிஎஸ்டி வரி முறை குறித்து பல்வேறு விமர்சனங்களைத் தொடர்ந்து வைத்து வரும் நிலையில், மன்மோகனே அதற்கு விருது கொடுத்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி பாஜக, தற்போது காங்கிரஸை சீண்டி வருகிறது. 

பாஜக, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு, பிசினஸ் லைன் சேஞ்ச் மேக்கர் விருது வழங்கப்பட்டது. அருண் ஜெட்லிக்கு அந்த விருதை வழங்கியது மன்மோகன் சிங் ஆவார். இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் ராகுல் காந்தி?' என காங்கிரஸை சீண்டும் வகையில் பதிவிட்டுள்ளது. 

இது குறித்து காங்கிரஸ் எந்த வித பதில் கருத்தையும் இதுவரை கூறவில்லை. காங்கிரஸ் தரப்பில் மன்மோகன் சிங், ஜிஎஸ்டி குறித்து பல்வேறு விமர்சனங்களை கடந்த காலங்களில் வைத்துள்ளார். சிங், இது குறித்து 2017 ஆம் ஆண்டு பேசுகையில், ‘உயர் ரக ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி முறை அமல் செய்த விதம் ஆகிய இரண்டும் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தின? நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரண்டும் பெருமளவு குறைத்துவிட்டன' என்று கூறியிருந்தார். 

அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் தான் ஒரு பேசிய கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து பேசுகையில், ‘சுமார் 1250 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. 18 சதவிகிதம் வரி இருந்த பொருட்களுகுக 12 முதல் 5 சதவிகம் எனக் குறைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில பொருட்களுக்கு வரி விலக்கு கூட அளிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் நாங்கள் கருத்து கேட்ட பின்னர் எடுத்த முடிவுகளாகும். ஆனால், எதிர்கட்சியினர் இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வரி முறையை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது வருத்தத்துக்குரியது' என்றார். 
 

.